தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய ஆதிவாசி மக்கள்
தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய ஆதிவாசி மக்கள்
பந்தலூர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் கொளப்பள்ளி அருகே உள்ள முருக்கம்பாடி ஆதிவாசி காலனியில் ஏராளமான ஆதிவாசி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பழுதடைந்த குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். இதனால் அவர்கள் அனைவரும் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பந்தலூர் முருக்கம்பாடி பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்ட ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் மூலம் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில் தரைதளம் ஆழம் இல்லாமலும் தரமற்ற முறையிலும் பணிகள் நடந்தது. இதுபற்றி அறிந்ததும் ஆதிவாசி மக்கள் அங்கு சென்று, பணியை பாதியில் நிறுத்தியதோடு இதுபற்றி மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் அம்ரித்த உத்தரவின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆதிவாசி மக்கள் தொகுப்பு வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்படுகிறது. எனவே எங்களுக்கு தரமான முறையில் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றனர். அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.