சுற்றுலா பயணிகளுக்கு பூக்கள் இனிப்பு கொடுத்து வரவேற்பு

சுற்றுலா பயணிகளுக்கு பூக்கள் இனிப்பு கொடுத்து வரவேற்பு

Update: 2022-01-01 11:20 GMT
ஊட்டி

புத்தாண்டை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்தில் இனிப்புகள், பூக்கள் கொடுத்து பழங்குடியின மக்கள் வரவேற்றனர். 

ஊட்டியில் குவிந்தனர்

ஆங்கில புத்தாண்டை குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் கொண்டாடுவதற்காக வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். இதனால் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பியது. அவர்கள் பொதுஇடங்களில் புத்தாண்டு கொண்டாடாமல், தாங்கள் தங்கிய அறைகளில் கேக் வெட்டி அமைதியான முறையில் கொண்டாடினர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, கர்நாடகா ஸ்ரீ தோட்டக்கலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.
அவர்கள் அங்கு பூத்து குலுங்கிய பல வண்ண மலர்களை கண்டு ரசித்ததுடன், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தாவரவியல் பூங்கா புல்வெளியில் அமர்ந்து குடும்பத்தினருடன் ஓய்வு எடுத்தனர். பெரிய புல்வெளி மைதானம் மூடப்பட்டு இருந்ததால் பிற இடங்களில் சுற்றுலா பயணிகள் உலா வந்தனர். ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். காட்சி மேடையில் நின்றபடி ஊட்டி ஏரியின் எழில் மிகுந்த அழகை பார்வையிட்டனர்.

பழங்குடியினர்கள் வரவேற்பு

ஊட்டி அருகே சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்துக்கு புத்தாண்டு தினத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு மூலம் நடத்தி வரும் தோடர் இன மக்கள் பூக்கள், இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். அப்போது அவர்கள் பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். தொடர்ந்து அங்கு தோடர் இன மக்கள் வட்டமாக நின்று பாடல்களை பாடி தங்களது பாரம்பரிய நடனம் ஆடினர். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தது உடன், செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு வந்தோம். இங்கு பூக்கள், இனிப்புகள் கொடுத்து வரவேற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.
தோடர் இன மக்கள் கூறும்போது, சுற்றுலா பயணிகள் மூலம் எங்களது வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது. இதனால் புதிய ஆண்டில் அவர்களை வரவேற்றோம் என்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை சூட்டிங்மட்டம், பைக்காரா மற்றும் ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசைகளில் நின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு காலதாமதமாகவே சென்றனர்.

மேலும் செய்திகள்