நீலகிரியில் புத்தாண்டையொட்டி ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
நீலகிரியில் புத்தாண்டையொட்டி ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஊட்டி
நீலகிரியில் புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
ஆங்கில புத்தாண்டு
உலகம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2021-ம் ஆண்டு முடிந்து புதிதாக 2022-ம் ஆண்டு பிறந்தது. நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டை ஒட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வழக்கமாக நள்ளிரவில் புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால் அதிகாலை மற்றும் காலையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஊட்டி சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயத்தில் அதிகாலை 5 மணிக்கு பங்கு குரு இம்மானுவேல் வேழவேந்தன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது.
காலை 8.30 மணிக்கு பங்கு குரு ஜெரேமியா ஆல்பிரட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும் கலந்துகொண்டனர். கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும், புதிய ஆண்டில் அனைவரும் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. முடிவில் நற்கருணை, ஆசீர் வழங்கப்பட்டது. ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிக் கொண்டதோடு, இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு பிரார்த்தனை
ஊட்டி புனித தாமஸ் ஆலயத்தில் காலை 10 மணிக்கு புத்தாண்டு ஆராதனை நடந்தது. ஊட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்கு தந்தை தனிஷ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதேபோல் ஊட்டி சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயம், மேரிஸ்ஹில் புனித மரியன்னை ஆலயம், பிங்கர்போஸ்ட் புனித திரேசன்னை ஆலயம், காந்தல் குருசடி ஆலயம் உள்பட பல்வேறு ஆலயங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
அதிகாலை நேரங்களில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அதேபோல் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலயங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கூடலூர்
ஆங்கில புத்தாண்டு நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தமிழகத்தில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டதால் தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை நடைபெறவில்லை. அதற்கு முன்னதாக இரவு 7 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் குழந்தை இயேசு, புனித மரியன்னை, சி.எஸ்.ஐ. தேவாலயம், புனித சூசையப்பர் ஆலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் பந்தலூர், நடுவட்டம், மசினகுடி உள்பட அனைத்து இடங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் ஒருவரையொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.