கொரோனா வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய 30 கண்காணிப்பு குழு

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய 30 கண்காணிப்பு குழுக்களை தென் சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் என்.கண்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-01-01 08:21 GMT
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதில் மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு சென்னையில் மிக அதிகமானோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சார்பில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னை ரிப்பன் மாளிகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மண்டலத்துக்கு 2 குழுக்கள் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு 2 குழுக்கள் வீதம், மாநகராட்சி மற்றும் போலீசார் அடங்கிய குழுக்கள் நேற்று கண்காணிப்பு பணியை தொடங்கினர்.

இந்த குழுக்களை தென் சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் என்.கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் விஷூ மஹாஜன், மாநகர வருவாய் அதிகாரி சுகுமார் சிட்டி பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த குழு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றாதவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்