மீன்பிடித்து விட்டு திரும்பிய போது காசிமேட்டில் கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

மீன்பிடித்து விட்டு திரும்பிய போது காசிமேட்டில் கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார்.;

Update: 2022-01-01 08:18 GMT
திருவொற்றியூர்,

சென்னை எண்ணூர் பாரதியார் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கிளாடிஸ் (வயது 56). மீனவரான இவர், காசிமேட்டை சேர்ந்த சேவியர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 30-ந்தேதி ராஜா, அய்யனார், ஆறுமுகம் உள்பட 8 மீனவர்களுடன் சேர்ந்து கடலில் மீன் பிடிக்க சென்றார்.

இந்தநிலையில் மீன்பிடித்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு அனைவரும் கரை திரும்பி கொண்டிருந்தனர். காசிமேட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் படகு வந்தபோது, மீனவர் கிளாடிஸ் படகில் பலகைகளை அடுக்கிக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று படகிலிருந்து தவறி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து அருகில் இருந்த சக மீனவர்கள் கடலில் குதித்து அவரை காப்பாற்றி காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவந்தனர். 

அங்கிருந்து 108 ஆம்புலன்சு மூலம் அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கிளாடிஸ் உயிரிழந்தார். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்