பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதல்; கட்டிட தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதல் கட்டிட தொழிலாளி பலி
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் (வயது 57). அதே பகுதியை சேர்ந்தவர்கள் பிரபு (37), ஜெயசிங் (34). இவர்கள் 3 பேரும் கட்டிட தொழிலாளர்கள். இந்த நிலையில் 3 பேரும் பாளையங்கோட்டை காந்தி நகர் பகுதியில் தங்கி இருந்து அந்த பகுதியில் நடக்கும் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் 3 பேரும் வேலைக்கு சென்றனர். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ராபர்ட் ஓட்டினார்.
சாந்தி நகர் போலீஸ் குடியிருப்பு அருகே சென்றபோது அந்த பகுதியில் வந்த ராட்சத கிரேன் எதிர்பாராதவிதமாக ராபர்ட் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து ராபர்ட் உள்ளிட்ட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ராபர்ட் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரபு, ஜெயசிங் ஆகிய 2 பேரும் லேசான காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராபர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.