வீரவநல்லூரில் குளத்துக்கு சென்றபோது பரிதாபம்: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி சாவு உறவினர்கள் சாலை மறியல்
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி சாவு
சேரன்மாதேவி:
வீரவநல்லூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொழிலாளி
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வீரவநல்லூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஹரிராமகிருஷ்ணன் என்பவரது மகன் சைலப்பன் (வயது 45). விவசாயக் கூலி தொழிலாளி.
இவருக்கு ராஜம்மாள் (40) என்ற மனைவியும், 12-ம் வகுப்பு படித்து வரும் அரிராமலட்சுமி (17), 10-ம் வகுப்பு படித்து வரும் கல்யாணி (15), 8-ம் வகுப்பு படித்து வரும் சந்தனமாரி (13) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சைலப்பன் நேற்று காலை வழக்கம் போல் அப்பகுதியில் உள்ள மருதகுளத்திற்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை சைலப்பன் மிதித்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் வீரவநல்லூர் போலீசார் உடனடியாக விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இதற்கிடையே, மின்துறை ஊழியர்களின் அலட்சியத்தால் விபத்து நடந்ததாக கூறி, சைலப்பனின் உறவினர்கள் வீரவநல்லூர் மோர் மடம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வராத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து நெல்லை- அம்பை பைபாஸ் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் சென்றன.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமகிருஷ்ணன் (சேரன்மாதேவி), பிரான்சிஸ் (அம்பை) ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், சைலப்பபன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அவரது 3 பெண் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
...........