திசையன்விளையில் பள்ளிக்கூடத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
பள்ளிக்கூடத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு;
திசையன்விளை:
திசையன்விளையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி, பள்ளிக்கூடத்துக்கு இந்து முன்னணியினர் பூட்டு போடும் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு நிலவியது.
பாலியல் தொல்லை
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் (வயது 50). இவர் பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மாணவியின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திசையன்விளை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.
போராட்டம்
இந்த நிலையில் தலைமறைவான தலைமை ஆசிரியரை உடனே கைது செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணியினர் நேற்று மாலையில் அந்த பள்ளிக்கூடத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதன்படி பள்ளிக்கூடம் அருகில் இந்து முன்னணியினர் திரண்டனர்.
இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசு ராஜா, மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் மாவட்ட கோட்ட தலைவர் தங்கமனோகர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் தலைமை ஆசிரியரை கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
..................