நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
பரவலாக மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு மழை குறைந்து பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் நிலவி வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் மழை பெய்தது. இதேபோல் நெல்லையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்தது. காலை நேரத்தில் லேசான மழை பெய்தது. பிற்பகலில் சிறிது நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
பாபநாசம் அணை நிலவரம்
பாபநாசம் அணை நீர்மட்டம் 134.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 448 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு 1,105 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 137 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 116.40 அடியாக உள்ளது. அணைக்கு வருகிற 285 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக அப்படியே திறந்து விடப்பட்டு உள்ளது.
மழை அளவு விவரம் (மி.மீட்டரில்) வருமாறு:-
சேரன்மாதேவி -7, மணிமுத்தாறு -18, நாங்குநேரி -9, பாளையங்கோட்டை -1, நம்பியாறு -7, கொடுமுடியாறு -2.