ஒரே நேரத்தில் 2 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் கீழ்பவானி வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும்-வேளாண் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
ஒரே நேரத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கீழ்பவானி வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஈரோடு
ஒரே நேரத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கீழ்பவானி வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டம்
வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவதை கால நீட்டிப்பு செய்ய வேண்டும். அதேபோல் புன்செய் பாசனத்துக்கு எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும்.
அகலப்படுத்த வேண்டும்
பவானிசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் ஆறு வழியாக சென்று கடலில் வீணாக கலந்தது. தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் கீழ்பவானி வாய்க்காலை அகலப்படுத்தி தற்போது வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி திறந்து விடுவதை, 4 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக ஒரே நேரத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.
கீழ்பவானி பாசன பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கப்பட உள்ளதால், அங்கு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். பல இடங்களில் பொட்டாஷ் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், நீர்நிலைகளில் கரையோரமாக பனை விதைகளை விதைக்க வேண்டும்.
சாயக்கழிவு
நீர்நிலைகளில் சாயக்கழிவுகளை கலக்கும் பிரச்சினை அதிகமாக உள்ளது. காடையம்பட்டியில் இருந்து சேர்வராயன்பாளையம் வரை இரவு நேரங்களில் சாயக்கழிவுகள் திறந்து விடப்படுகிறது. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொட்டகோம்பை உள்ளிட்ட மலைக்கிராம மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மத்திய அரசின் விவசாய உதவித்தொகையை பெற முடியாமல் சிரமப்படுகிறார்கள். சக்தி சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2015-2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த ஊக்கத்தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
வெள்ளை அறிக்கை வேண்டும்
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் போன்ற பாசன பகுதிகளில் வீட்டுமனைகள், தொழில் கூடங்கள், ஓட்டல்கள், உணவு பதப்படுத்தும் ஆலைகள் போன்றன அமைக்க அனுமதிக்ககூடாது என்று சட்டம் கூறுகிறது. ஆனால் பாசன பகுதிகளில் வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? அனுமதியின்றி உள்ளவற்றை நீக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்தும், எத்தனை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். ஈரோடு-சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு நகர்ப்புறங்களில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை.
புதிய நெல் ரகம்
கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஆர்.என்.ஆர்.150-48 என்ற புதிய ரக நெல் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். இந்த நெல் சரியான வளர்ச்சி இல்லாததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
நெல் காய வைக்கும் எந்திரத்தை நெல் கொள்முதல் நிலையங்களில் அமைக்க வேண்டும். காலிங்கராயன் வாய்க்காலில் செல்லும் தண்ணீரில் உப்பு தன்மை ஆய்வு எப்போது செய்யப்படுகிறது, தண்ணீரில் உள்ள உப்பு தன்மை அளவு போன்ற விவரங்களை விவசாயிகளுக்கு குறுந்தகவல் மூலமாக தெரிவிக்க வேண்டும். மின்சார உயர்கோபுரங்கள் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஆவின் பால் கொள்முதல் செய்ததற்கு கடந்த 50 நாட்களாக பணம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. ஒருங்கிணைந்த மஞ்சள் ஏலம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினர். அதற்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசும்போது கூறியதாவது:-
தண்ணீர் திறப்பு
கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு 20-ந் தேதி எதிர்பாராதவிதமாக வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக 21 நாட்களாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதை சரிசெய்யும் வகையில் ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என்று காலநீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. புன்செய் பாசனத்துக்கு எப்போது தண்ணீர் தேவை என்று விவசாயிகள் பாசன சபை சார்பில் முடிவு செய்து கோரிக்கை வைத்தால், அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாசன பகுதிகளில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் உரிய அனுமதி பெற்று கட்டப்பட்டு இருக்கும். அனுமதி இல்லாத கட்டிடங்கள் அகற்றப்படும். அங்குள்ள கழிவுநீர் விவசாய பகுதிகளில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் இணைப்பு துண்டிப்பு
பொட்டாஷ் உரம் 300 டன் வரப்பெற்று உள்ளது. அனைத்து பகுதிகளிலும் உரம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். கோபி பகுதியில் புதிதாக பயிரிடப்பட்ட ரகம் குறித்து தனிக்குழு அமைத்து ஆய்வு செய்யப்படும். நெல் கொள்முதல் நிலையங்கள் அரசு நிலம், பொது இடங்களில் அமைக்கப்படுகிறது. கோவிலுக்கு சொந்தமான இடத்திலும் அமைக்கலாம். கடந்த 19-ந் தேதி முதல் ஆன்லைன் பதிவு முறை செயல்படுகிறது. விவசாயிகள் செல்போன்கள் மூலமாக எளிதாக பதிவு செய்யலாம். சாயக்கழிவு கலப்பதை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சேர்வராயன்பாளையத்தில் ஏற்கனவே 2 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரவு நேரத்தில் ரோந்து பணி அதிகரிக்கப்படும். காலிங்கராயன் வாய்க்காலில் உப்பு தன்மை பரிசோதனை செய்யப்படும் முடிவுகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். சக்தி சர்க்கரை ஆலையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆவின் மூலமாக பால் கொள்முதல் செய்த பணத்தை வழங்க ரூ.37 கோடி வரவேண்டியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி வரை பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.