புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2021-12-31 21:09 GMT
சேலம்:
புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
புத்தாண்டு கொண்டாட்டம்
சேலம் மாவட்டத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை நேற்று விதித்தனர்.
இதையடுத்து போலீசார் அறிவுரையின் பேரில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் பலர் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும் வாலிபர்கள் பலர் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டை வரவேற்றனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சிறப்பு பிரார்த்தனை
சேலம் 4 பகுதியில் உள்ள குழந்தை இயேசு தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல் சேலம் கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஆயர் ஜவகர் வில்சன் ஆசிர்டேவிட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
மேலும் சூரமங்கலம் திரித்துவ ஆலயம், அஸ்தம்பட்டி இம்மானுவேல் ஆலயம், ஜான்சன்பேட்டை அந்தோணியார் ஆலயம் உள்பட கிறிஸ்தவ ஆலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
வாகன சோதனை
புத்தாண்டையொட்டி சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் மாடசாமி, மோகன்ராஜ் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று இரவு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாநகரில் தடையை மீறி சாலையில் அதிவேகமாக 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை ஓட்டினாலோ அல்லது குடிபோதையில் வாகனங்களை ஓட்டினாலோ அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் வாகனங்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேம்பாலங்களில் செல்ல தடை
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஈரடுக்கு மேம்பாலம், சாரதா கல்லூரி சாலையில் உள்ள மேம்பாலம் உள்ளிட்ட மேம்பாலங்களில் நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வாகன ஓட்டிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் தலைமையில் 1,050 போலீசார் மற்றும் 200 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்