பெங்களூருவில், தடையை மீறி ஊர்வலம் சென்ற கன்னட அமைப்பினர்

எம்.இ.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி பெங்களூருவில் தடையை மீறி ஊர்வலம் சென்ற கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-31 21:05 GMT
பெங்களூரு: எம்.இ.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி பெங்களூருவில் தடையை மீறி ஊர்வலம் சென்ற கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

முழு அடைப்பு வாபஸ்

பெலகாவியில் கடந்த மாதம் (டிசம்பர்) சங்கொள்ளி ராயண்ணாவின் சிலையை உடைத்தும், அரசு வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியும் எம்.இ.எஸ். அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டு இருந்தார்கள். இதற்கு மாநிலம் முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் எம்.இ.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க கோரி பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், பெலகாவியில் வன்முறையில் ஈடுபட்ட எம்.இ.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க கோரி டிசம்பர் 31-ந் தேதி (அதாவது நேற்று) முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட கூட்டமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருந்தார். முழுஅடைப்புக்கு பல்வேறு கன்னட அமைப்புகள், பிற சங்கங்கள் ஒத்துழைப்பு அளிக்காததாலும், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் வேண்டுகோள்படியும் முழுஅடைப்பு போராட்டத்தை வாட்டாள் நாகராஜ் வாபஸ் பெற்றார்.

தடையை மீறி ஊர்வலம்

ஆனாலும் எம்.இ.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க கோரி பெங்களூருவில் ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் மறுத்து விட்டார். ஆனாலும் தடையை மீறி ஊர்வலம் நடத்தப்படும் என்று கன்னட கூட்டமைப்புகள் தெரிவித்திருந்தன. அதன்படி, பெங்களூரு டவுன்ஹால் முன்பு கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று காலையில் ஒன்று திரண்டனர்.

வாட்டாள் நாகராஜ், சா.ரா.கோவிந்த் உள்ளிட்ட பல்வேறு கன்னட அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று இருந்தார்கள். அவர்கள், எம்.இ.எஸ். அமைப்புக்கு எதிராகவும், அந்த அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் டவுன் ஹாலில் இருந்து மைசூரு வங்கி சர்க்கிள் நோக்கி கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் தடையை மீறி ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்கள்.

கைது

கொரோனா காரணமாக ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், போராட்டக்காரர்கள் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். மேலும் வாட்டாள் நாகராஜ், சா.ரா.கோவிந்த் உள்ளிட்ட கன்னட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தார்கள். அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று பஸ்சில் ஏறி அழைத்து சென்றனர். பின்னர் கைதானவர்களை போலீசார் விடுவித்தனர்.

முன்னதாக வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறும் போது, ‘பெலகாவியில் வன்முறையில் ஈடுபட்ட எம்.இ.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். அந்த அமைப்புக்கு அரசு தடை விதித்தே தீர வேண்டும். இல்லையெனில் கன்னட கூட்டமைப்புகள் சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்