பல கோடி ரூபாய் மதிப்பிலான பச்சை மரகதலிங்கம் மீட்பு
தஞ்சையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.
சிலை திருட்டு தடுப்பு போலீசார்
தஞ்சை அருளானந்த நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் தொன்மையான கோவில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் இயக்குனர் ஜெயந்த்முரளி உத்தரவின் பேரில் ஐ.ஜி. தினகரன், போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் வழிகாட்டுதலின்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராம், அசோக் நடராஜன் ஆகியோர் தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், பாலசந்தர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று முன்தினம் தஞ்சைக்கு வந்தனர்.
வீட்டில் சோதனை
பின்னர் அவர்கள், தஞ்சை அருளானந்த நகர் பகுதியில் உள்ள அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த சாமியப்பன் என்பவரின் மகன் அருணபாஸ்கரிடம் தொன்மையான கோவில் சிலைகள் ஏதேனும் தங்கள் வசம் உள்ளதா? என விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர், தனது தந்தை சாமியப்பன் வசம் தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாகவும், அதை தற்சமயம் வங்கி லாக்கரில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பச்சை மரகத லிங்கம் மீட்பு
அந்த சிலை உங்களது தந்தையின் வசம் எப்படி? யார் மூலம் எப்பொழுது கிடைக்கப்பெற்றது? என்பது குறித்து போலீசார் கேட்ட போது, அது தொடர்பாக எவ்வித ஆவணங்களும் தங்களிடம் இல்லை என்று அவர் தெரிவித்தார். பின்னர் அந்த தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை விசாரணையின் பொருட்டு ஆஜர்படுத்துமாறு போலீசார் கேட்டனர்.
உடனே வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த பச்சை மரகத லிங்கத்தை அருணபாஸ்கர் எடுத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
பல கோடி ரூபாய் மதிப்பு
இந்த பச்சை மரகத லிங்கம் பல கோடி ரூபாய் மதிப்பிலானது ஆகும். இந்த மரகதலிங்கம் ஏதேனும் கோவிலுக்கு சொந்தமானதாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சாட்சிகள் முன்னிலையில் மரகதலிங்கத்தை போலீசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் கொடுத்த தனி அறிக்கையின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சிலை ஏதேனும் கோவிலுக்கு சொந்தமானதா? என்பது குறித்தும், இதன் தொன்மை தன்மை குறித்தும் பூர்வாங்க விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.