நெல் கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ.60 லஞ்சம்-குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
நெல் கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ.60 லஞ்சம் கேட்பதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
மதுரை,
நெல் கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ.60 லஞ்சம் கேட்பதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
அரசு விவசாயிகளின் நலனுக்காக அந்தந்த பகுதிகளில் நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து உள்ளது. இங்கு லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு மூடைக்கு எங்களிடம் ரூ.60 லஞ்ச பணம் கேட்டு வலுக்கட்டாயமாக வசூலிக்கின்றனர். நாங்கள் தர மறுத்தால் நெல் கொள்முதல் செய்யாமல் காக்க வைக்கின்றனர். அதோடு எங்கள் நெல் மீது குறைகள் கூறுகின்றனர். நெல்கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை என்று கலெக்டர் அறிவித்து இருக்கிறீர்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பது சரியானதா? எனவே கலெக்டர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்தி விட்டு, விவசாயிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
கடும் நடவடிக்கை
இந்தாண்டு விவசாயிகள் பயிர் காப்பீட்டு செய்து இருக்கின்றனர். மழையால் பல இடங்களில் அதிக சேதம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அதிகாரிகள் மழையால் மாவட்டத்தில் பாதிப்பு இல்லை என்று அறிக்கை கொடுத்து இருக்கின்றனர். எனவே காப்பீட்டு தொகை பெற முடியவில்லை. எனவே கலெக்டர் தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
கலெக்டர் பேசும் போது, நெல் கொள்முதல் மையத்தில் மூடைக்கு லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம். அதனை மீறி, கேட்டால், விவசாயிகள் புகார் கொடுக்கலாம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புகார் தெரிவிக்கலாம்
அதன்பின் கலெக்டர் அனிஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயிகள் அல்லாத பிற நபர்கள, வியாபாரிகள் நெல் மணிகள் விற்பனை செய்ய முற்பட்டாலும் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் செய்வதாக கண்டறியப்பட்டால் அது தொடர்பான புகார்களை மதுரை கலெக்டரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வாட்ஸ்-அப் எண் 9994909000 அல்லது கீழ்கண்ட தொலைப்பேசி எண் 0452-2526888 என்ற எண்ணில் புகார் செய்யலாம். என்று கூறப்பட்டு இருந்தது.