கோவில் பெயர் பலகை அகற்றப்பட்டது தொடர்பாக மோதல்; அடுத்தடுத்து சாலை மறியல்
கோவில் பெயர் பலகை அகற்றப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அடுத்தடுத்து சாலை மறியல் நடைபெற்றது.
ஆண்டிமடம்:
மோதல்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சாலைக்கரை கிராமத்தில் இரட்டை பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பெயர் பலகை வைப்பது சம்பந்தமாக அதே ஊரைச் சேர்ந்த இருபிரிவினருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் பெயர் பலகை அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் கல்லால் தாக்கிக் கொண்டனர். இதில் ஒரு தரப்பில் ஒரு பெண், ஒரு ஆண் என 2 பேரும், மற்றொரு தரப்பில் சிலரும் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து கலைந்து போகச்செய்தனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், அகற்றப்பட்ட பெயர் பலகையை வைக்கக்கோரி ஆண்டிமடம் 4 ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகளும் ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஆண்டிமடம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அகற்றப்பட்ட பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் (த.பழூர்)ஜெகதீசன், (மீன்சுருட்டி) கோபி மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால், கைது செய்து பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளை வேனில் ஏற்றி ஒரு தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
கைது
இதையடுத்து அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன் தலைமையிலான குழுவினர் இந்து முன்னணியினரிடம் பிரச்சினை குறித்து விசாரிக்கவும், அவர்களை சந்திக்கவும் அனுமதி கேட்டபோது, போலீசார் மறுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அகற்றப்பட்ட பெயர் பலகையை அதே இடத்தில் வைக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலும், போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களை பார்க்க அனுமதிக்காததாலும் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன் தலைமையிலான 34 பேர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த இந்து முன்னணியின் திருச்சி கோட்ட பொறுப்பாளர் குணா தலைமையிலான 16 பேர் ஆண்டிமடம் நான்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியலால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.