அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்தது.
நாகர்கோவில்,
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்தது.
பேச்சுவார்த்தை
நாகர்கோவில் வடசேரி அருகில் மாவட்ட வனத்துறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசு ரப்பர் கழக அலுவலக கூட்ட அரங்கில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்தது.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்தும், ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிவர்த்தி செய்வது குறித்தும், அரசு ரப்பர் கழக தொழிற்சாலையை லாப நோக்கில் கொண்டு செல்வது குறித்தும் துறை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒத்துழைக்க வேண்டும்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அவர் வழியில் செயல்படும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து தொழிலாளர்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.
குமரி மாவட்ட ரப்பர் கழக தொழிற்சங்கத்தினருடன் இதுநாள்வரை ஊதிய உயர்வு குறித்து 4 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதன் அடிப்படையில், தற்போது அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கூடிய விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ரப்பர் கழகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள். தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமெனவும், அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் தின்கர் குமார், அரசு ரப்பர் கழக பொது மேலாளர் குருசாமி, தொழிலாளர் துணை ஆணையர் முகமது அப்துல் காதர், வக்கீல் மகேஷ், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்பட அரசு ரப்பர் கழக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.