3-வதாக பிறந்த பெண் குழந்தையை சுவரில் அடித்து கொன்ற பெற்றோரின் கொடூர செயல்
உசிலம்பட்டி அருகே பெண் சிசு புதைக்கப்பட்ட சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 3-வதாக பெண்ணாக பிறந்ததால் அந்த குழந்தையை பெற்றோரே சுவரில் அடித்து கொன்றது அம்பலமாகி உள்ளது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே பெண் சிசு புதைக்கப்பட்ட சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 3-வதாக பெண்ணாக பிறந்ததால் அந்த குழந்தையை பெற்றோரே சுவரில் அடித்து கொன்றது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்த பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளன.
பெண் சிசு கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியகட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர், முத்துப்பாண்டி(வயது 31). இவருடைய மனைவி கவுசல்யா(26). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 21-ந்ேததி 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. பிறந்த சில நாட்களில் அந்த குழந்தை உயிரிழந்தது.
அந்த பெண் சிசுவை யாருக்கும் தெரியாமல் பெற்றோரே வீட்டின் முன்பு புதைத்துள்ளனர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி, சேடப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வதற்குள், குழந்தையின் பெற்றோர் தலைமறைவாகிவிட்டனர்.
பெற்றோர் கைது
இதையடுத்து புதைக்கப்பட்ட பெண் சிசு உடலை தோண்டி எடுத்து அங்கேேய பிரேத பரிசோதனை செய்தனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கோடாங்கிநாயக்கன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த முத்துப்பாண்டி, அவரது மனைவி கவுசல்யாவை சேடப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
கொன்றதாக வாக்குமூலம்
விசாரணையில், ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3-வதாக பெண் குழந்தை பிறந்ததால், அதனை கொன்றுவிடும் கொடூர முடிவை எடுத்துள்ளனர். அந்த குழந்தையின் தலையை சுவரில் அடித்து கொைல செய்ததாக முத்துப்பாண்டி, கவுசல்யாக வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சேடப்பட்டி போலீசார் ெதாடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடும் நடவடிக்கை
இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், “பெண் சிசு கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண் குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோர், அரசு காப்பகத்தில் ஒப்படைக்கலாம். பெண் சிசு வதை என்பது மிக கொடூர செயல். பெண் சிசுவை பாதுகாப்பது நம் கடமை. இதுபோன்று இனி ஒரு சம்பவம் மதுரை மாவட்டத்தில் நிகழ வேண்டாம். இதுபோன்று வளர்க்க முடியாத நிலையில் யாரிடமாவது பெண் குழந்தை இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.
---