கோவிலை திறக்கக்கோரி பக்தர்கள் சாலை மறியல்
அறந்தாங்கியில் கோவிலை திறக்கக்கோரி பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி,
அறந்தாங்கி சவுராஷ்டிரா தெருவில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இருதரப்பினர்களுக்கு இடையே தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரு தரப்பினர் பால் குடம் எடுத்து வந்து சாமி கும்பிட வந்தனர். அப்போது கோவில் பூட்டப்பட்டு இருந்ததால் அதிருப்தி அடைந்த பக்தர்கள் கோவிலை திறக்கக்கோரி அறந்தாங்கி எம்.ஜி.ஆர். சிலை அருகே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.