குடியாத்தத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

குடியாத்தத்தில் பட்டப்பகலில் மளிகைக்கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 20 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்று விட்டனர்.;

Update: 2021-12-31 18:30 GMT
குடியாத்தம்

குடியாத்தத்தில் பட்டப்பகலில் மளிகைக்கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 20 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்று விட்டனர்.

நகை, பணம் திருட்டு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் டி.டி.காந்தி (வயது 45). அந்தப்பகுதியில் உள்ள விநாயகபுரம் கூட்ரோடு பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். நேற்று மதியம் காந்தியின் மனைவி உஷாராணி, வீட்டை பூட்டிவிட்டு கணவருக்கு மதிய உணவு எடுத்து சென்று கொடுத்து விட்டு, கே.வி. குப்பம் அருகே உள்ள சென்னங்குப்பம் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று உள்ளார்.

மாலையில் குடியாத்தத்தில் தனியார் கல்லூரியில் படிக்கும் தனது மகளை காந்தி அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் இரண்டு கதவுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள், அங்கிருந்த சாவியைக் கொண்டு பீரோவை திறந்து அதில் இருந்த 20 பவுன் நகை, பணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து காந்தி குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், மணிகண்டன் உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டனர். வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்