சிறுமியிடம் தங்க கொலுசை பறித்த பெண் கைது
சிறுமியிடம் தங்க கொலுசை பறித்த பெண் கைது;
குழித்துறை:
திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரீனா. இவர் தனது உறவினர் ஒருவருடைய திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு வீட்டுக்கு ெசல்வதற்காக தனது 2 குழந்தைகளுடன் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ஊருக்கு செல்லும் அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முண்டியடித்தபடி பஸ்சில் ஏற முயன்றனர். அப்போது அவர்கள் பின்னால் நின்றுகொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரீனாவின் 6 வயது மகளின் காலில் கிடந்த ½ பவுன் தங்க கொலுசை பறித்தார். இதை தெரிந்து கொண்ட சிறுமி சத்தம் போட்டு அழவே அந்த பெண் திருடிய கொலுசை கீழே வீசி விட்டு தப்பி ஓட முயன்றார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் ஒன்றுகூடி அந்த பெண்ணை சுற்றிவளைத்து பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மார்த்தாண்டம் அருகே உள்ள பிலாவிளையை சேர்ந்த சாந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து சாந்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.