களிமண் எடுக்க அனுமதி கிடைக்காததால் வாழ்வாதாரத்தை இழந்த மண்பாண்ட தொழிலாளர்கள்

களிமண் எடுக்க அனுமதி கிடைக்காததால் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். மேலும், பொங்கல் பண்டிகைக்கு மண்பாண்டங்களை தயாரிக்க முடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2021-12-22 18:43 GMT
தா.பழூர், 
மண்பாண்ட தொழிலாளர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் 50-க்கும் ேமற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மண்பாண்டம் செய்வதை தவிர வேறு தொழில்கள் எதுவும் தெரியாது. தமிழகம் முழுவதும் கடந்த 25 ஆண்டுகளில் கணிசமாக மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் தொழிலை கைவிட்டுவிட்டு பல்வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். 
தற்போது மிகவும் குறைந்த அளவிலேயே மண்பாண்ட தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு காலங்களில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட முடியாமல் 2 ஆண்டுகளாக சிரமம் அடைந்து உள்ளனர். 
ஊரடங்கு தளர்வுகள்...
கடந்த ஆண்டு கொரோனா இருந்த போதிலும் இவர்களுக்கு மண்பாண்டம் செய்வதற்கு மூலப்பொருளான களிமண் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. அதனால் மண்பாண்ட உற்பத்தியில் அவர்களுக்கு கடந்த காலங்களில் சிரமம் ஏற்படவில்லை. ஆனால் விற்பனை செய்வதில் இடர்பாடுகளை சந்தித்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக மண் பண்டங்கள் செய்தும் அவற்றை சூளையில் இட்டு சுட முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இயற்கையும் அவர்களுக்கு ஒத்துழைக்கும் விதத்தில் உள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அதிகளவில் மண் பாண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியும் என்று நம்பினார். 
7 மாதங்களாக அனுமதி கிடைக்கவில்லை
அண்ணங்காரம்பேட்டை கிராமத்தில் தனியார் நிலங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு தேவையான களிமண்ணை அரசு அனுமதியோடு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி முதல் மாவட்ட கலெக்டர் வரை பலமுறை மனு அளித்தும் இதுவரை அவர்களுக்கு களிமண் எடுப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு அனுமதி பெற்று எடுத்த களிமண்ணில் மீதம் இருந்த சொற்ப அளவு களிமண்ணை கொண்டு குறைந்த அளவில் மண் பாண்டங்களை உற்பத்தி செய்துள்ளனர். மண் எடுக்க அனுமதி பெறுவதற்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, மண்பாண்ட தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அதிகாரிகளிடம் வழங்கியும், 7 மாத காலங்கள் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு அலைந்தும் களிமண் எடுக்க அனுமதி கிடைக்காததால் மண்பாண்ட தொழிலாளர்கள் மனமுடைந்த நிலையில் உள்ளனர். 
அனுமதி வழங்க கோரிக்கை
கார்த்திகை தீபத்திருநாளுக்கு அகல் விளக்கு தயாரிப்பது, பொங்கல் பண்டிகைக்கு சட்டி மற்றும் பானைகள் தயாரிப்பதும் அவர்களது 6 மாத பொருளாதார தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்யும். எனவே ஒவ்வொரு ஆண்டும் தடையில்லாமல் மண்பாண்ட தொழிலுக்கு தேவையான களிமண் எடுப்பதற்கு அரசு தடையில்லாமல் அனுமதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் பானை, சட்டி உள்ளிட்ட மண்பாண்டங்களை தயாரிக்க முடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.
தலைமுறையாக செய்துவரும்
மண்பாண்ட தொழிலை கைவிட தயாராக இல்லை
கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து படிப்படியாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் இந்த ஆண்டு களிமண் எடுக்க அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டியதால் பொருளாதார ரீதியாக மண்பாண்ட தொழிலாளர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். அவர்களது அடிப்படை தேவையான 3 வேளை உணவுக்கே அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் எந்த சூழ்நிலையிலும் உழைக்க தயாராக உள்ளதாகவும், தலைமுறை தலைமுறையாக செய்துவரும் மண்பாண்ட தொழிலை கைவிட தயாராக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
உலோக பாத்திர பயன்பாடுகளுக்கு மத்தியில் மண்பாண்டத்தில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துவிட்டது. இருப்பினும் இந்த தொழிலை தவிர எங்களுக்கு வேறு ஏதும் தெரியாததால் இந்த தொழிலை நம்பியை குடும்பத்தை நடத்தி வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
மழைக்கால நிவாரண உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்காலங்களில் பணி செய்ய முடியாது என்பதால் தமிழக அரசு சார்பில் மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் அதற்கான தொகை செலுத்தப்படும். இந்த ஆண்டு முதல் முறையாக ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மழைக்கால நிவாரண நிதியை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், மண்பாண்டங்களை தமிழக அரசு விலைக்கு வாங்கி கூட்டுறவு பண்டக சாலைகள் மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு
பொங்கல் பரிசாக பானை, சட்டி வழங்க வேண்டும்
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வழங்கும்போது, பொங்கல் தொகுப்போடு அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பானை, சட்டி, அடுப்பு ஆகியவற்றையும் சேர்த்து வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இதன்மூலம் தமிழகம் முழுவதும் அதிகளவு மண் பாண்டங்கள் தேவைப்படும். அதிகாரிகள் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை தொய்வு இல்லாமல் செய்து கொடுப்பார்கள். அரசுக்கு மண்பாண்டங்கள் தேவை என்கிற சூழ்நிலை உருவாகும்போது மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தேவைப்படும் மூலப்பொருள்கள் கிடைப்பதில் அரசு சரியான கவனம் எடுத்து எங்களது வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்