குறுகலான பாலம் சீரமைக்கப்படுமா?
வலங்கைமான் அருகே கொட்டையூரில் குறுகலான பாலம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வலங்கைமான்:
வலங்கைமான் அருகே கொட்டையூரில் குறுகலான பாலம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வாய்க்கால் பாலம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கொட்டையூர் கிராமத்தில் 1,200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள தெற்கு தெருவில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதற்கும், ரேசன் கடை, கூட்டுறவு வங்கி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வதற்கும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் தெற்கு தெரு வாய்க்கால் பாலம் பயன்பட்டு வருகிறது.
இந்த பாலம் குறுகலாகவும், நீண்ட நாட்களாக இணைப்பு சாலை இல்லாமலும் காணப்படுகிறது.
சீரமைக்க வேண்டும்
பாலத்தின் இணைப்பு பகுதி மிகவும் குறுகலாக உள்ளது. இந்த குறுகிய பாதை வழியாக பாலத்தை கடந்து செல்ல முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் பாலத்தில் இருந்து அடிக்கடி வாய்க்காலில் தவறி விழுவதும் நடக்கிறது. அங்கு மின்விளக்குகளும் இல்லை.
எனவே இந்த பாலத்தை அகலப்படுத்தி, இணைப்பு சாலை ஏற்படுத்தி மக்கள் சிரமமின்றி பயன்படுத்த ஏதுவாக உரிய சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.