காலிங்கராயன் பாசன பகுதிகளில் 2 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
காலிங்கராயன் பாசன பகுதிகளில் 2 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
காலிங்கராயன் பாசன பகுதிகளில் 2 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
நெல் கொள்முதல் நிலையம்
காலிங்கராயன் பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிர்கள் கதிர்விட்டு அறுவடைக்கு தயாராக உள்ளன. இதனால் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் காலிங்கராயன் பாசன பகுதியில் ஈரோடு வைராபாளையம் மற்றும் எஸ்.பி.அக்ரஹாரம் ஆகிய 2 இடங்களில் முதல் கட்டமாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.
ஊக்கத்தொகை
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நெல் கொள்முதல் மையத்தினை தொடங்கி வைத்தார். இந்த நெல் கொள்முதல் மையங்களில் ‘ஏ’ கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,960 மற்றும் ஊக்கத்தொகை ரூ.100 என மொத்தம் ரூ.2 ஆயிரத்து 60-க்கும், பொது ரக நெல் குவிண்டால் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,940 மற்றும் ஊக்கத்தொகை ரூ.75 என மொத்தம் ரூ.2 ஆயிரத்து 15-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
விவசாயிகள் நெல்லினை நேரடியாக அரசின் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து, அரசு நிர்ணயிக்கப்பட்ட வரன்முறைக்கு உட்பட்ட 17 சதவீத ஈரப்பத விகிதாசாரத்தில் கொள்முதல் செய்யப்படும். மின்னணு தராசு மூலம் துல்லியமாக எடையிட்டு மின்னணு பரிவர்த்தனை மூலம் (இசிஎஸ்) விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
பொட்டாஷ் உரம்
முன்னதாக அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோட்டில் அரசு நெல் கொள்முதல் நிலையம் 2 இடங்களில் முதல் கட்டமாக தொடங்கப்பட்டு உள்ளது. அவசியத்தை பொறுத்து கூடுதலாக கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு தனியார் கொள்முதல் விலையை விட, அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.5 கூடுதலாக கொள்முதல் செய்யப்படுகிறது.
இங்கு, விவசாயிகள் எவ்வளவு நெல் கொண்டு வந்தாலும் பெற்றுக்கொள்ளப்படும். வியாபாரிகள் கொண்டு வரும் நெல் கண்டிப்பாக பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இங்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, அனைத்து உர விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் வருகை
மேலும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விழாவும் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் மிகவிரைவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். விழா நடைபெறும் தேதி விரைவில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நுகர்பொருள் வாணிப கழக ஈரோடு மண்டல மேலாளர் முருகேசன், தரக்கட்டுப்பாட்டு துணை மேலாளர் சக்தி, ஆர்.டி.ஓ. பிரேமலதா, மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.