வேக கட்டுப்பாட்டை மீறிய வாகனங்களுக்கு அபராதம்
திருவாரூரில் வேக கட்டுப்பாட்டை மீறிய வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
திருவாரூர்:
திருவாரூரில் வேக கட்டுப்பாட்டை மீறிய வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
சோதனை
தமிழகத்தில் நாள்தோறும் வாகன விபத்துக்களால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்களில் வாகனங்களை அதி வேகமாக இயக்குவது முக்கிய காரணமாகிறது. எனவே வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்படி திருவாரூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வேக கட்டுப்பாட்டு கருவி மூலம் வாகனங்கள் செல்வதை சோதனை செய்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறுகையில்,
திருவாரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுப்பாட்டை மீறி வேகமாக செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்தினை கட்டுப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி எந்தெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளனர்.
அபராதம்
அதன்படி பள்ளிகள் உள்ள பகுதியில் 20 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆஸ்பத்திரி உள்ள பகுதியில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பிரதான சாலைகளில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் வாகனங்களை இயக்க வேண்டும். இதனை வாகனங்கள் கடைப்பிடிக்க வேக கட்டுப்பாட்டு கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் வேக கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது என்றார்.