அ.தி.மு.க. கிளை அமைப்பு தேர்தல் சுமுகமாக நடந்து வருகிறது

திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. கிளை அமைப்பு தேர்தல் சுமுகமாக நடந்து வருகிறது என காமராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2021-12-22 17:43 GMT
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. கிளை அமைப்பு தேர்தல் சுமுகமாக நடந்து  வருகிறது என காமராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.
கிளை அமைப்பு தேர்தல் 
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிக்கு உட்பட்ட வார்டு கிளைகள், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், வலங்கைமான், பேரளம், நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு கிளைகள் மற்றும் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 430 கிராம ஊராட்சிகளிலும் உள்ள கிளை அமைப்பு தேர்தல் 2 நாட்கள் நடைபெறுகிறது.
தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
இந்த தேர்தலை திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளும், காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றனர். 
இந்த தேர்தலை முறைப்படுத்தி நடத்துவதற்காக தேர்தல் பார்வையாளர்களாக திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், கட்சியின் அமைப்பு செயலாளர்கள் டாக்டர் கோபால், சிவா.ராஜமாணிக்கம், மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வு 
இந்த தேர்தல் மாவட்டத்தில் அந்தந்த ஒன்றிய, நகர, பேரூராட்சிகளுக்கான பிரதான இடங்களில் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் பார்வையாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.  திருவாரூரில் ஒரு திருமண மண்டபத்தில் திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிளை கழகங்களுக்கு நடைபெற்ற தேர்தலை முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர் காமராஜ் எம்.எல்.ஏ. கூறுகையில், 
திருவாரூர் மாவட்டத்தில் 20 ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் உள்ள வார்டு மற்றும் பிற கிளைகளுக்கு அமைப்பு தேர்தல் விறு,விறுப்பாக நடந்து  வருகிறது. கட்டுப்பாடு மிகுந்த இயக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் கட்சி தொண்டர்கள் தங்கள் பகுதிகளின் பிரதிநிதிகளை ஒருமித்த கருத்துடன் சுமுகமான முறையில் தேர்வு செய்து வருகின்றனர். 
கிளை நிர்வாகிகளை தேர்வு செய்வதில் தொண்டர்கள் காட்டும் ஆர்வம் கட்சியின் ஜனநாயக உணர்வை காட்டும் வகையில் அமைந்துள்ளது என்றார். 

மேலும் செய்திகள்