குறிஞ்சிப்பாடி பகுதியில் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்திற்காக மரக்கன்றுகள் நடும் பணி

குறிஞ்சிப்பாடி பகுதியில் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்திற்காக மரக்கன்றுகள் நடும் பணியை வேளாண்மை துணை இயக்குனா் கென்னடி ஜெபக்குமாா் தொடங்கி வைத்தாா்.

Update: 2021-12-22 17:38 GMT
கடலூர், 

தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தின் கீழ் விவசாயிகளின் வாழ்வை வளமாக்கும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம், முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டதையொட்டி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் விவசாயிகள் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். இத்திட்டத்திற்காக விவசாயிகளுக்கு இலவசமாக தேக்கு, செம்மரம், வேங்கை, மகோகனி, பலா உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கன்றுகளை பராமரிப்பதற்காக கன்று ஒன்றுக்கு ரூ.7 வீதம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மானியமாக வழங்கப்பட உள்ளது.

அந்த வகையில் குறிஞ்சிப்பாடி வட்டாரத்திற்கு 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு பெறப்பட்டு தகுதியான விவசாயிகளுக்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே திம்மராவுத்தன்குப்பம் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரது வயலில் தேக்கு, செம்மரம், வேங்கை மற்றும் மகோகனி ஆகிய மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடக்கிறது. இந்த பணிகளை கடலூர் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் தொடங்கி வைத்து, பார்வையிட்டு, இத்திட்டத்தின் நன்மைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன், காடுகளின் பரப்பை அதிகரித்து சுற்றுச்சூழலை காக்கும் பணிக்கு இத்திட்டம் முக்கிய பங்காற்றுவதுடன், விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும் ஈட்டி தருகிறது என்றார். இதில் வேளாண்மை அலுவலர் அனுசுயா, துணை வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், உதவி வேளாண்மை அலுவலர்கள் கார்த்திகேயன், சிவக்குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியாராணி, உதவி தொழில்நுட்ப மேலாளர் மனோஜ், பயிர் அறுவடை சோதனை பணியாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்