திட்டக்குடி அருகே ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

திட்டக்குடி அருகே 3 டன் ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2021-12-22 17:28 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இளமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில், வெளிமாவட்டங்களுக்கு கடத்தி செல்வதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இளமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள ஒரு கட்டிடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து போலீசார் தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, அதனை பதுக்கியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திட்டக்குடி அடுத்த தொழுதூரை சேர்ந்த பெரியசாமி மகன் பிரசாந்த் (வயது 28) என்பவர், இளமங்கலம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வெளிமாவட்டங்களுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்