சிதம்பரத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி கையாடல் மேலாளர் கைது

சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி கையாடல் செய்த மேலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-22 17:25 GMT
சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 55). இவர் சிதம்பரம் அண்ணாமலை நகரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

 இவருடைய நிறுவனத்தில் சிதம்பரம் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சுரேஷ் (40) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்ததோடு, நிறுவனத்தின் வரவு- செலவு கணக்குகளையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனத்தின் 2018-19-ம் ஆண்டு கணக்குகளை தணிக்கை செய்தபோது, ரூ.2 கோடி மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தனியாக நிதி நிறுவனம் நடத்தியது அம்பலம்

மேலும் நடத்திய விசாரணையில், நிதி நிறுவனத்தில் மேலாளர் சுரேஷ் ரூ.2 கோடி கையாடல் செய்ததுடன், அந்த பணத்தை வைத்து வேறு ஒரு நிதி நிறுவனத்தை தனியாக நடத்தி வந்ததும் தெரியவந்தது.  இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடியை கையாடல் செய்த சுரேசை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்