திண்டிவனம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உத்தரவு
திண்டிவனம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் ரூ.268 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் டி.மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-
பணிகளை விரைந்து முடிக்க
திண்டிவனம் நகராட்சியில் கழிவுநீர் சேகரிப்பு குழாய் 165.889 கி.மீ. தொலைவிலும், 6 கழிவுநீர் உந்து நிலையங்கள், 3 கழிவுநீர் தூக்கும் நிலையங்கள், 4 கழிவுநீர் தூக்கும் எந்திர குழிகள் மற்றும் கழிவுநீர் உந்து குழாய் 15.26 கி.மீ. அளவிலும், வீட்டு இணைப்புகள் 19,230 என திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
பொதுமக்களுக்கு பாதாள சாக்கடை திட்டப்பயன் குறித்த விழிப்புணர்வை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய இந்த திட்டப்பணிகளை ஒப்பந்த பணி மேற்கொள்ளும் நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தில் ஏதேனும் பணி சுணக்கம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து சுணக்கம் இன்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.