மில் தொழிலாளி வீட்டில் நகை திருடிய வாலிபர் சிக்கினார்

வேடசந்தூர் அருகே மில் தொழிலாளி வீட்டில் நகை திருடிய வாலிபர் சிக்கினார்.

Update: 2021-12-22 17:14 GMT
வடமதுரை:

வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார், வடமதுரை அருகே தென்னம்பட்டி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மந்தைகுளத்தில் சந்தேகப்படும் வகையில் 3 பேர் வாலிபர்கள் சுற்றித்திரிந்தனர். 

இதையடுத்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அவர்களில் 2 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார். இதைத்தொடர்ந்து பிடிபட்ட நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தென்னம்பட்டி இந்திராநகரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 23), நவீன்குமார் (19) மற்றும் தப்பியோடிவர் வேடசந்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்த குமார் (19) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய குமாரை போலீசார் தேடி வந்தனர். 

இதற்கிடையே திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில் அவர், குமார் என்பதும், வேடசந்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்த மில் தொழிலாளியான ஆனூர்சாமியின் வீட்டில் 7 பவுன் நகைகளை  திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து குமாரை போலீசார் கைது செய்தனர். குமார் தான் திருடிய நகையை, எரியோட்டில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்து திண்டுக்கல், சென்னை, மதுரை ஆகிய ஊர்களுக்கு சென்று பணத்தை செலவு செய்துள்ளார். இதற்கிடையே பணம் தீர்ந்ததால் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்