கீழ்பவானி பாசன கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள்
கீழ்பவானி பாசன கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள்
முத்தூர்,
முத்தூர் அருகே மேட்டாங்காட்டுவலசில் கீழ்பவானி பாசன கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா என்று விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நஞ்சை சம்பா நெல்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதன்படி முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் நெல் நாற்று நடவு பணிகள் முடிவடைந்து பயிர் பாதுகாப்பு மேலாண்மையாக களை எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
ஆகாயத்தாமரைகள்
இந்த நிலையில் முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டுவலசு-குட்டப்பாளையம் செல்லும் பிரதான சாலையின் குறுக்கே செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் மேல்புறம் ஆகாயத்தாமரைகள் நீண்ட தூரத்திற்கு நன்கு வளர்ந்து ஒரு கரையை தொட்டபடி அடர்ந்து பச்சை, பசேலென்று காட்சி அளித்து ஆக்கிரமித்துள்ளன.
இதனால் இப்பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் செல்லும் சீரான நீரோட்டம் தடைபட்டு உள்ளது. மேலும் இந்த ஆகாயத்தாமரைகள் படர்ந்து உள்ள கீழ்பவானி பாசன கால்வாய் பகுதிகளில் தண்ணீர் தேங்கி மெதுவாக செல்கிறது.மேலும் இப்பகுதியில் ஆகாயத்தாமரைகள் சீரான நீரோட்டத்தை தடுப்பதால் மழைக்காலங்களில் அதிக அளவு நீர் செல்லும் போது நீர் மேலே எழும்பி சாலையில் வெளியேறி வீணாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
துரித நடவடிக்கை
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் மேட்டாங்காட்டுவலசு பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் வளர்ந்து படர்ந்து ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரான முறையில் கால்வாயில் தண்ணீர் தொடர்ந்து செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.