மேல்மலையனூர் அருகே திடீரென உடைந்த ஆற்று தரைப்பாலம் பஸ் சிக்கியதால் பரபரப்பு

மேல்மலையனூர் அருகே திடீரென ஆற்று தரைப்பாலம் உடைந்தது. அதில், பஸ் ஒன்று சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-22 17:10 GMT

மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் இருந்து செஞ்சி நோக்கி வடபாலை வழியாக அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.  

பஸ், மேலச்சேரி அருகே வரகாநதியின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பாலத்தின் ஒரு பகுதி திடீரென உடைந்து உள்வாங்கியது.

பஸ் சிக்கியது

இதில் பஸ்சின் முன்பக்க டயர் அந்த பள்ளத்தின் உள்ளே சிக்கி, முன்பகுதி மட்டும் பாலத்தின் தரையோரடு தரையாக அமுங்கியபடி நின்றது. இதனால் பஸ்சை அங்கிருந்து முன்னும், பின்னும் நகர்த்த முடியாமல் போனது. 

 இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் பஸ்சில் இருந்து அவசர அவசரமாக இறங்கினர். தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேரில் வந்து பஸ்சை வெளியே எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மழையால் சேதம்

சமீபத்தில் பெய்த கனமழையால் வரகாநதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது, தரைப்பாலத்தில் சிறிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் மணல் கொட்டி தற்காலிகமாக அடைத்து வைத்திருந்தனர். 

இந்த சூழ்நிலையில் தான் அந்த வழியாக நேற்று அரசு பஸ் வந்த போது, திடீரென பாலம் உடைந்து அதில் பஸ் சிக்கி கொண்டது.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்