ஆரோவில் அருகே பரபரப்பு கட்டிட ஒப்பந்ததாரரை தாக்கி கார் கடத்தல் நகையுடன் தப்பிய 4 பேர் சிக்கினர்
ஆரோவில் அருகே கட்டிட ஒப்பந்ததாரரை தாக்கி நகையை பறித்ததுடன், அவர் ஓட்டி வந்த காரையும் கடத்தி சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
புதுச்சேரி நைனார் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36), கட்டிட ஒப்பந்ததாரர். இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை விஷயமாக தனது காரில் பங்களாமேட்டில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த பூத்துறை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார்.
பங்களாமேடு- பூத்துறை சாலையில் சென்றபோது அங்கு வந்த ஒரு பெண் உள்பட 4 பேர் திடீரென அந்த காரை வழிமறித்து செந்தில்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்தனர். மேலும் அவரை தாக்கி கீழே இறக்கி விட்டு அந்த காரையும் கடத்திக்கொண்டு சென்று விட்டனர்.
4 பேர் கைது
இதுகுறித்து செந்தில்குமார், ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக புதுச்சேரி உருவையாறு பகுதியை சேர்ந்த ராயன் என்கிற கர்ணா (27), புதுச்சேரி சாரத்தை சேர்ந்த தமிழ்குமரன் (28), புதுச்சேரி கொசப்பாளையம் வெண்ணிலா (23), உளுந்தூர்பேட்டை தாலுகா சித்தானங்கூரை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.