மகன், மனைவியை கொலை செய்ய முயன்ற டிரைவருக்கு வலைவீச்சு

பெருந்துறை அருகே மகன், மனைவியை கொலை செய்ய முயன்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-12-22 17:06 GMT
பெருந்துறை அருகே மகன், மனைவியை கொலை செய்ய முயன்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டிரைவர்
பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் அருகே உள்ள வெள்ளியம்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 32). இவர் அங்குள்ள ரொட்டி தயாரிக்கும் பேக்கரி ஒன்றில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி பவித்ரா (24).
இவர்களுக்கு, சுதர்சன் (6) என்ற மகனும், தர்ஷினிஸ்ரீ (1) என்ற மகளும் உள்ளனர். ஜெகநாதன் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பவித்ரா கண்டித்து வந்துள்ளார்.
மகனை தாக்கினார்
சம்பவத்தன்று இதுசம்பந்தமாக ஜெகநாதன், பவித்ராவுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெகநாதன், அருகே இருந்த மகன் சுதர்சன் கழுத்தில் காலை வைத்து நசுக்கியுள்ளார். உடனே சத்தம் போடவே அருகே உள்ள வீட்டில் இருந்து பவித்ராவின் பெற்றோர் அங்கு ஓடிவந்தனர். பின்னர் ஜெகநாதனை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்து சுதர்சனை காப்பாற்றினர். இதைத்தொடர்ந்து பவித்ராவின் பெற்றோர் அவரையும், அவருடைய மகன், மகளையும் அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அங்கு மகன், மகளுடன் பவித்ரா தங்கியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெகநாதன் நேற்று முன்தினம் காலை பவித்ராவின் பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த பவித்ராவை பார்த்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அவரது துப்பட்டாவை எடுத்து கயிறு போல முறுக்கி பவித்ராவின் கழுத்தை நெருக்கியுள்ளார்.
வலைவீச்சு
இதனால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அவரது பெற்றோர் ஓடி வந்து, ஜெகநாதனிடம் இருந்து பவித்ராவை காப்பாற்றினர். அதன்பின்னர் காயம் அடைந்த பவித்ரா பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் பவித்ரா பெருந்துறை போலீசில் தன்னையும், தனது மகனையும் கொலை செய்ய முயற்சிக்கும் கணவர் ஜெகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசுதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் சபிபுல்லா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, ஜெகநாதனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்