‘தி.மு.க. ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு இல்லை’

தி.மு.க. ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

Update: 2021-12-22 17:05 GMT
திண்டுக்கல்:

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, வேட்புமனுக்களை வழங்கினார். 

இதேபோல் திண்டுக்கல் மீனாட்சி மகால் உள்பட 5 இடங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடந்தது. இந்த இடங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், தேர்தல் பிரிவு இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பாண்டியன் ஆகியோர் சென்று தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோதவாடி பகுதியில் முன்னாள் அமைச்சரும், துணை சபாநாயகருமாக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். 

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம், தி.மு.க. ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி தான். அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஜனநாயக முறைப்படி நடக்கிறது என்றார்.

மேலும் செய்திகள்