தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்ட பெண் போலீஸ் ஏட்டு

பவானியில் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை பெண் போலீஸ் ஏட்டு மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்தார்.

Update: 2021-12-22 16:57 GMT
பவானியில் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை பெண் போலீஸ் ஏட்டு மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்தார்.
கையை பிடித்து இழுத்தார்
ஈரோடு மாவட்டம் பவானி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவர் ஆனந்தவள்ளி. இவர் தனது பணியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் மொபட்டில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
பவானி-குமாரபாளையத்தை இணைக்கும் காவிரி ஆற்றின் பழைய பாலத்தில் சென்றபோது பாலத்தின் கைப்பிடி சுவர் மீது பெண் ஒருவர் ஏறி கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஆனந்தவள்ளி அதிர்ச்சி அடைந்தார். உடனே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த பெண் அருகே சென்றார். பின்னர் அவரது கையை பிடித்து இழுத்தார்.
தற்கொலை முடிவு
அப்போது தான் அவர் வயதானவர் என்று தெரியவந்தது. அதன்பின்னர் அந்த மூதாட்டியிடம் நீங்கள் யார்? எதற்காக கைப்பிடி சுவர் மீது ஏறினீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர் என் பெயர் செல்லம்மாள் (வயது 76). நான் பவானி அருகே உள்ள வரதநல்லூர் கிராமத்தில் கணவருடன் வசித்து வந்தேன். எங்களுக்கு பிள்ளைகள் கிடையாது.
இந்த நிலையில் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் நான் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தேன். இந்த நிலையில் வயதானதால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மிகவும் அவதிப்பட்டேன். இதில் மனமுடைந்த நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன் என்று தெரிவித்தார்.
முதியோர் இல்லத்தில் சேர்ப்பு
இதைத்தொடர்ந்து மூதாட்டியை பெண் போலீஸ் ஏட்டு ஆனந்தவள்ளி முதியோர் இல்லத்தில் சேர்க்க முடிவு செய்தார். உடனே மூதாட்டியை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து குமாரபாளையம் அருகே வளையகாரனூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்துக்கு அழைத்து சென்று விட்டார்.
அதைத்தொடர்ந்து பெண் போலீஸ் ஏட்டு ஆனந்தவள்ளி அங்குள்ள மற்ற வயதானவர்களை பார்த்து பேசினார். அவர்களிடம் என்ன உதவி வேண்டும் என்று கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.
பாராட்டு
தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய போலீஸ் ஏட்டு ஆனந்தவள்ளியை பொதுமக்கள் பாராட்டினார்கள். மேலும் இதுபற்றி அறிந்த பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் பெண் தலைமை காவலர் ஆனந்தவள்ளியை பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்