அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஒரே மாதிரி நிதி ஒதுக்க வேண்டும்

அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஒரே மாதிரி நிதி ஒதுக்க வேண்டும்

Update: 2021-12-22 16:49 GMT
பொள்ளாச்சி

அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஒரே மாதிரி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றிய குழு கூட்டம்

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவர் சண்முகசுந்தரம், ஆணையாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:-
அ.தி.மு.க., தி.மு.க. என அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஒரே மாதிரி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் தற்போது சிலருக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே அதை பிரித்து அனைவருக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வரும் காலங்களிலும் பாரபட்சமின்றி அனைத்து கவுன்சிலர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போது தான் அடுத்த மாதம் நடைபெறும் கூட்டம் சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க முடியும். கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

டெங்கு காய்ச்சல்

ஒன்றிய குழு தலைவர் லட்சுமி கூறுகையில், மற்ற ஒன்றியங்களில் கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் என்ன நடைமுறை மேற்கொள்ளப்படுகிறதோ? அதை பின்பற்றி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் விவரத்தை தீர்மானத்தில் கொண்டு வர வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அதற்கு தலைவர், துணை தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகளால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இதையடுத்து இதற்கு போதிய அவகாசம் கேட்டு கூட்டத்தை முடித்து கொள்வதாக ஒன்றிய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். 
முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் பேசும்போது கூறுகையில், கொரோனா குறைந்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. நல்ல தண்ணீரில் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே தண்ணீரை மூடி வைக்க வேண்டும். டயர், தேங்காய் தொட்டிகளில் உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கொசுப்புழு பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் டெங்கு குறித்து அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்