8ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்
8ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்
பெருமாநல்லூர்
திருப்பூர் அருகே செல்போனில் ‘பிரீபயர்’ விளையாடிக்கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். மனம் அழுத்தம் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவன்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே தொரவலூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது45). அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதா (37). இவர்களது மகன்கள் கண்ணன் (13) மற்றும் தினேஷ் (9). இதில் மூத்த மகன் கண்ணன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இதற்காக பள்ளியில் உள்ள விடுதியில் இருந்தான்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் வகுப்புகள் நடக்கவில்லை. இதனால் கண்ணன் வீட்டிற்கு வந்து விட்டான். அதன்பின்னர் பள்ளி செல்லவில்லை. ஆனால் வீட்டில் இருக்கும் போது செல்போனில் ‘பிரீபயர்’ விளையாட்டு விளையாடி வந்ததாக தெரிகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று செல்போனில் கண்ணன் ஆன்லைனில் ‘பிரீபயர்’ விளையாடி கொண்டிருந்தான். அவன் அருகில் அவனுடைய தம்பி அமர்ந்து இருந்தான். அப்போது திடீரென செல்போனை தனது தம்பியிடம் கொடுத்த கண்ணன் வீட்டின் மற்றொரு அறைக்கு சென்றான். அதன்பின்னர் அவன் வௌியே வரவில்லை. இதையடுத்து மகனை காணாத சுதா அவனை தேடினார். அப்போது வீட்டில் உள்ள மற்றொரு அறையில் கண்ணன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கண்ணனை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து மாணவன் கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ‘பிரீபயர்’ விளையாடும்போது அந்த விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்கிற மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டானா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.