அரசு பள்ளியில் ஆபத்தான சுற்றுச்சுவர்
அரசு பள்ளியில் ஆபத்தான சுற்றுச்சுவர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் பள்ளியின் சுற்றுச்சுவர் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
ஆபத்தான சுற்றுச்சுவர்
நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளியில் உள்ள கழிப்பிட சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனா. இதையடுத்து பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டது. மேலும் பயன்பாடு இல்லாமல் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டது.
இதை தொடர்ந்து ஆபத்தான கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையில் பள்ளியின் சுற்றுச்சுவர் விரிசல் விட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாக்கினாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள பயனற்ற கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு உள்ளது. இதற்கிடையில் பள்ளியின் நுழைவு வாயிலில் முன்பு உள்ள சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இன்னும் இந்த சுற்றுச்சுவரை இடித்து அகற்றவில்லை.
தினமும் பள்ளி மாணவ- மாணவிகள் மட்டுமல்லாது ரோட்டில் செல்லும் பொதுமக்களும் இந்த ஆபத்தான சுற்றுச்சுவர் வழியாக நடந்து சென்று வருகின்றனர். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. நெல்லையை போன்று மீண்டும் ஒரு விபத்து நடைபெறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள சுற்றுச்சுவரை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிப்பது தொடர்பாக அனுமதி கேட்டு ஒன்றிய அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்படும் என்றனர்.