கோவில் வீடுகளின் ஜன்னல்களை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

கோவில் வீடுகளின் ஜன்னல்களை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

Update: 2021-12-22 16:36 GMT
வால்பாறை

வால்பாறையில் தொழிலாளர் குடியிருப்பில் புகுந்து கோவில், வீடுகளின் ஜன்னல்களை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்ததோடு வனத்துறையினரையும் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவில் சுவரை உடைத்தது

வால்பாறையில் கடந்த 3 மாதங்களாக காட்டு யானைகள் பல்வேறு எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் கூட்டம் கூட்டமாகவும் ஒற்றையாகவும் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. இந்த நிலையில் வால்பாறை அருகில் உள்ள சிங்கோனா எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் முகாமிட்டிருந்த ஒற்றை யானை நேற்று முன்தினம் நள்ளிரவு 2.45 மணிக்கு தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவிலின் சுவரை உடைத்தது. 

இதைப் பார்த்த தொழிலாளர்கள் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வருவதற்குள் அந்த காட்டு யானை தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து தொழிலாளர்களின் வீட்டு ஜன்னல்களை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு வீட்டிலிருந்த அரசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை எடுத்து தின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் வீட்டுக்குள் பதுங்கி கொண்டார்கள். 

வனத்துறையினரை விரட்டியது 

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குடியிருப்பில் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். மேலும் ஜீப்பில் இருந்து சைரனை ஒலிக்க செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை வனத்துறையிரை நோக்கி வேகமாக வந்ததோடு அவர்களை விரட்டியது. மேலும் ரோட்டில் கிடந்த மரக்கட்டைகளை தூக்கி வனத்துறையினர் மீது வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள்.

காட்டு யானை வனத்துறையினரை விரட்டியதை பார்த்ததும், அந்த வீட்டில் பதுங்கியிருந்தவர்கள் தங்களின் குழந்தைகளோடு வீட்டின் பின்பக்கமாக வெளியேறி உயிர்தப்பினார்கள். 

பொருட்கள் சேதம்

சிறிதுநேரம் கழித்து வனத்துறையினர் காட்டு யானையை பட்டாசுகளை வெடிக்கச் செய்து விரட்டியுள்ளனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் யானையை குடியிருப்புக்கு அருகில் உள்ள வனப் பகுதிக்குள் விரட்டி விட்டனர். யானை வனப்பகுதிக்குள் செல்லும் போது அந்தப்பகுதியில் வீட்டிலிருந்த அரிசிகளையும் தூக்கிச் சென்றது. காட்டு யானையின் அட்டகாசத்தால் செந்தில்குமார், சேகர், செல்வி, ராஜேந்திரன் ஆகியோரது வீட்டின் ஜன்னல்களும் வீட்டிலிருந்த பொருட்களும் சேதமடைந்தன. மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், டேன்டீ கோட்ட மேலாளர் விக்ரம் ஆகியோர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து சம்பவ இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் புகுந்து காட்டு யானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு (நேற்று முன்தினம்) புகுந்த காட்டு யானைகள் 4-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி உள்ளது. இதனால் நாங்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். அதனால் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபவடுவதோடு, காட்டு யானைகள் ஊருக்குள் புகாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்