வேளாங்கண்ணி அருகே பரிதாபம்: சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நண்பர்கள் 2 பேர் பலி

வேளாங்கண்ணி அருகே சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நண்பர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2021-12-22 16:33 GMT
வேளாங்கண்ணி:-

வேளாங்கண்ணி அருகே சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நண்பர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 

மீன் வாங்க சென்றனர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கை நல்லூர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் வைரக்கண்ணு. இவருடைய மகன் மணிமாறன்(வயது 21). இவருடைய நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஹரிஹரன்(21), கொல்லன்திடல் பகுதியை சேர்ந்த குமரமுத்து மகன் மனோஜ்குமார்(21). 
இவர்கள் 3 பேரும் நேற்று மீன் வாங்குவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் நாகை அருகே உள்ள அக்கரைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மணிமாறன் ஓட்டிச்சென்றார். 

சுவரில் மோதியது

தெற்கு பொய்கைநல்லூர் அருகே உள்ள ஒரு வேகத்தடையில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அங்கிருந்த சுவரில் மோதியது. 
இந்த விபத்தில் மணிமாறன், ஹரிஹரன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மனோஜ்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

2 பேர் பலி

அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிமாறன், ஹரிஹரன் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்