வேலூர் சலவன்பேட்டையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

வேலூர் சலவன்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-22 16:28 GMT
வேலூர்

வேலூர் சலவன்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வழங்கவில்லை

வேலூர் மாநகராட்சி 32-வது வார்டு சலவன்பேட்டை பகுதியில் புஜகாரத்தெரு, பழனி ஆச்சாரி தெரு, கச்சேரி ஸ்கூல் தெரு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. 

மேலும் தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த சிறுமின்விசை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் மின் மோட்டார்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்குக் கூட தண்ணீர் இல்லாமல் அவர்கள் அவதி அடைந்தனர். மேலும் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வந்தனர். மாநகராட்சி டேங்கர் லாரிகள் மூலம்கூட தண்ணீர் வழங்கவில்லை, எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் ஆணைக்குளத்தம்மன் கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாநகராட்சி அதிகாரிகள் வந்து குடிநீர் வழங்கப்படும், என உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம், என போலீசாரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்