நாட்டறம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை முத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் மகன் விஷ்வா (வயது 18). இவர் கந்திலி அருகே கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி.2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் தண்ணீர் தொட்டியில் நீரேற்றி உள்ளார். தொட்டி நிரம்பியதும் மின்மோட்டாரின் சுவிட்சை ஆப் செய்துள்ளார்.
அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுப்பேட்டை சமுதாய சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை, டாக்டர்கள் பரிசோதித்து விஷ்வா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி, பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.