ஏலகிரிமலை பகுதியில் இறந்தவர் உடலை ஓடைபுறம்போக்கு நிலத்தில் புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

இறந்தவர் உடலை ஓடைபுறம்போக்கு நிலத்தில் புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு;

Update: 2021-12-22 16:26 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தாயலூர் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு யாராவது இறந்து விட்டால் அவரது உடலை பொதுமக்கள் ஊருக்கு வெளியே ஓடை புறம்போக்கு இடத்தில் பொதுமக்கள் அடக்கம் செய்து வந்தனர். 

இந்த நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நீரோடையில் உடலை புதைக்கக் கூடாது என்பதைக் கருதி சுடுகாட்டுக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது.  புதிதாக ஏற்படுத்தப்பட்ட அந்த சுடுகாட்டில் 10-க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தாயலூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி (வயது 50) என்பவர் நேற்று முன்தினம் உடல்நிலை பாதிப்பால் இயற்கை மரணம் அடைந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய பழைய சுடுகாடான ஓடை புறம்போக்கில் குழி வெட்டியுள்ளனர். 

இது தொடர்பாக ஊர் பொதுமக்கள் இரு தரப்பினருக்கும் இடையே நேற்று மதியம் வரை தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்த ஏலகிரிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் உடலை அடக்கம் செய்ய தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஓடைப் புறம்போக்கில் உடலை  அடக்கம் செய்யக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து புதிதாக ஏற்படுத்தப்பட்ட சுடுகாட்டில் அடக்கம் செய்ய குழி தோண்டப்பட்டு நேற்று மாலை இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்