ஹெலிகாப்டரின் பாகங்களை கொண்டு செல்ல பாதை
ஹெலிகாப்டரின் பாகங்களை கொண்டு செல்ல பாதை
குன்னூர்
குன்னூர் அருகே விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் ராட்சத பாகங்களை கொண்டு செல்ல பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக புதர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
ஹெலிகாப்டர் விபத்து
குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலி காப்டர் விபத்தில் சிக்கியது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரி ஏர்மார்ஷல் மானவேந்தர் சிங் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோன்று தமிழக போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் பாகங்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஹெலிகாப்டரின் ராட்சத பாகங்களை வெளியே கொண்டு வர பாதை வசதி இல்லாததால், அவற்றை வெட்டி சிறு சிறு பாகங்களாக எடுத்துச்செல்லப்பட்டு வருகிறது.
ராட்சத பாகங்கள்
இந்த பணியில் விமானப் படையினர், ராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களோடு சமவெளி பகுதியில் இருந்து வந்த 50 பேருக்கும் மேலான நபர்கள் ஹெலிகாப்டரின் பாகங்கள் வெட்டி எடுத்து முட்டையாக கட்டி கொண்டு செல்லும்பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
மேலும் வெறலிகாப்டரின் என்ஜின் பாகம் மட்டுமே 1½ டன் எடை கொண்டதாக உள்ளது. எனவே அதனை சுமந்து செல்வது என்பது இயலாத காரியம். அத்துடன் மீதுமுள்ள உதிரிபாகங்களும் அதிக எடை கொண்டதாக இருக்கிறது.
புதர்கள் அகற்றம்
எனவே ஹெலிகாப்டரின் ராட்சத பாகங்களை கொண்டு செல்வது குறித்து வேறு வழி உள்ளதா என கலந்தாலோசனை செய்யப்பட்டது. விபத்து நடந்த இடம் ஆங்கிலேயர் காலத்தில் மாட்டு வண்டி சென்று வந்த பாதை என்பது தெரிய வந்து உள்ளது. அத்துடன் விபத்து நடந்த இடத்தில் இருந்து கீழ் பகுதியில் 200 மீட்டர் தூரத்தில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை உள்ளது.
எனவே இந்த பாதை வழியாக அதிக எடையுள்ள ராட்சத பாகங்களை கொண்டு செல்ல முடியுமா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் முதற்கட்டமாக வனத்துறையினர் மாட்டு வண்டி பாதையில் உள்ள புதர்களை அகற்றி வருகிறார்கள்.