கோத்தகிரியில் காபி பழங்கள் அறுவடை மும்முரம்

கோத்தகிரியில் காபி பழங்கள் அறுவடை மும்முரம்

Update: 2021-12-22 16:00 GMT
கோத்தகிரி

கோத்தகிரியில் காபி பழங்கள் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது.  ஆனால் அதன் விலை வீழ்ச்சியடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். 

காபி சாகுபடி 

கோத்தகிரி அருகே உள்ள தட்டப்பள்ளம் மற்றும் குஞ்சப்பனை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் காபி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர சில பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராகவும் காபி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இந்த பயிரில் அராபிகா மற்றும் ரோபஸ்டா என 2 வகை பயிர்கள் உள்ளன. காபி செடிகளில் காய்த்து பழுத்து குலுங்கும் காபி பழங்களை டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யலாம். தற்போது காபி பழங்கள் பழுத்து உள்ளதால் அவற்றை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

விலை குறைந்தது 

பின்னர் அறுவடை செய்த காபி பழங்களை நன்கு உலர வைத்து, தோல் நீக்கிய காபி கொட்டைகளை காபி வாரியத்திலும், தனியார் வியாபாரி களிடமும் விற்பனை செய்து வருவது வழக்கம். இந்த காபி கொட்டைகளை நன்கு உலர வைக்க சூரியஒளி தேவை.

தற்போது கோத்தகிரி பகுதியில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் காபி கொட்டைகளை உலர்த்த முடியவில்லை. இதனால் பழங்களாகவே அவற்றை விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக அவற்றின் விலையும் மிகவும் குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். 

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-  

உலரவைக்க முடியவில்லை

காபி அறுவடையின்போது உலர வைக்கப்பட்ட காபி கொட்டைகள் கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு ரூ.160 வரை மட்டுமே கிடைக்கிறது. அத்துடன் போதிய வெளிச்சம் இல்லாததால் காபி பழங்களை உலர வைக்கவும் முடியவில்லை.

இதனால் காபி பழங்களை கிலோ ரூ.20 முதல் ரு.25 வரை விற்று வருகி றோம். இந்த பகுதியில் பல இடங்களில் காபி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருவதால், விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கும் வகையில் கோத்தகிரியில் காபி வாரிய கிளை அமைத்து கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். அதை மாவட்ட நிர்வாகம் செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.  

மேலும் செய்திகள்