புத்தாண்டு முதல் ஒகேனக்கல்லை பிளாஸ்டிக் மாசில்லா பகுதியாக மாற்ற நடவடிக்கை கலெக்டர் தகவல்

புத்தாண்டு முதல் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை பிளாஸ்டிக் மாசில்லா பகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-22 15:28 GMT
தர்மபுரி:
புத்தாண்டு முதல் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை பிளாஸ்டிக் மாசில்லா பகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுற்றுலா தலம்
தமிழக அரசின் உத்தரவுப்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் அவற்றின் பயன்பாடு குறையவில்லை. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை முழுமையாக தர்மபுரி மாவட்டத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2022-ம் புத்தாண்டு முதல் இந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஒகேனக்கல் பகுதியை பிளாஸ்டிக் மாசில்லா பகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன்பாடு, வினியோகத்தை ஒகேனக்கல்லில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வணிக நிறுவனங்கள், கடைகள் முழுமையாக தவிர்த்து இந்த தடை உத்தரவை பின்பற்ற வேண்டும்.
அபராதம்
ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத எளிதில் மக்கும் தன்மை கொண்ட துணிப்பைகள், சணல் பைகள், பாக்கு மட்டைகள், கண்ணாடி குவளைகள், வாழை இலைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் ஒகேனக்கல்லை பிளாஸ்டிக் மாசில்லாத சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒகேனக்கல் பகுதியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
இதுதொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் திடீர் ஆய்வு மற்றும் தொடர் ஆய்வு நடத்தப்படும். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தெரியவந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்