திருச்செந்தூர் நகராட்சி வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம்
திருச்செந்தூர் நகராட்சி வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் நாளை நடக்கிறது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி:
திருச்செந்தூர் நகராட்சி வார்டு மறுவரையறை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வார்டு மறுவரையறை
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட திருச்செந்தூர் நகராட்சி உள்ளாட்சி அமைப்பின் வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியும் மற்றும் 2019 வீட்டுவரி கேட்பின் அடிப்படையில் தயார் செய்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பார்வைக்கு கடந்த 18-ந் தேதி வெளியிடப்பட்டது. கடந்த 20-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் மறுவரையறை ஆணையத்தின் தலைவர் பழனிகுமார் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் திருச்செந்தூர் நகராட்சி தொடர்பாக 5 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கருத்து கேட்பு கூட்டம்
இதனை தொடர்ந்து மறுவரையறை ஆணையத்தின் அறிவுரையின் பேரில் திருச்செந்தூர் நகராட்சி வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனைகள், ஆட்சேபனைகள் மற்றும் கருத்து கேட்பு கூட்டம் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது. அப்போது, வார்டு வரையறை தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது ஆலோசனைகள், ஆட்சேபனைகள், கருத்துக்களை நேரடியாக மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.