தமிழ்நாடு மாநில மனநல மருத்துவ சங்க மாநில மாநாடு
தமிழ்நாடு மாநில மனநல மருத்துவ சங்க மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்தது
தூத்துக்குடி:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையங்களை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த மனநல மருத்துவர்கள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு
தமிழ்நாடு மாநில மனநல மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு தூத்துக்குடியில் 2 நாட்கள் நடந்தது. மாநாட்டை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நேரு குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில மனநல மருத்துவ சங்க தலைவர் டி. குமணன், துணைத் தலைவர் எம். மாலையப்பன், செயலர் சிவ இளங்கோ, மாநாட்டு தலைவர் பன்னீர்செல்வம், செயலர் எஸ். சிவசைலம், தூத்துக்குடி அரசு மருத்துவமனை மனநலத்துறை தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
போதை ஒழிப்பு மனநல மருத்துவம் என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டின்போது, போதை, வீடியோ கேம்ஸ், கைப்பேசிகளை அதிக நேரம் பயன்படுத்துதல் போன்றவற்றால் மன அழுத்தத்துக்கு உள்ளாவோருக்கு அளிக்கப்பட வேண்டிய மன உளவியல் சிகிச்சை குறித்து விவாதிக்கப்பட்டது.
மறுவாழ்வு மையம்
மாநாட்டில், தமிழகத்தில் மாவட்டம் தோறும் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையங்களை அரசு ஏற்படுத்தி பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சிகளை அளிக்க முன்வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் மனநல மருத்துவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.