குப்பை கிடங்கில் கடும் துர்நாற்றம்
வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோவை
வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
குப்பை கிடங்கு
கோவையில் தினமும் 1000 டன் குப்பை சேகரமாகிறது. இது வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பையால் வெள்ளலூர், போத்தனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் உள்ள ஈக்களால், சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனால் அதை ஒழிக்க ஸ்பிரே அடிக்கும் பணி நடைபெற்றது. தற்போது அந்த பணியும் சரியாக நடைபெறவில்லை. இதற்கிடையில் வெள்ளலூர் கிடங்கில் உள்ள குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரிப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அந்த நடவடிக்கை முறையாக நடைபெறவில்லை.
கடும் துர்நாற்றம்
இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த மழை மற்றும் தற்போது பனிப்பொழிவு ஆகியவை காரணமாக அந்த குப்பை கிடங்கில் தண்ணீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே குப்பை கிடங்கை வெள்ளலூரில் இருந்து அகற்ற வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது குப்பையை தரம்பிரித்து கிடங்கில் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் முறைப்படி தரம்பிரிக்காமல் குவிந்து கிடக்கும் குப்பையில் செடிகள் முளைக்கும் நிலை உருவாகி உள்ளது.
நிரந்தர தீர்வு
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பனிக்காலத்தில் குப்பையில் துர்நாற்றம் வருவது வழக்கம்ம். அங்கு ஸ்பிரே அடிக்க அறிவுறுத்தி இருக்கிறோம். பயோமைனிங் முறையில் பழைய குப்பையை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ‘ஸ்வட்ச் சர்வக்சன் 2.0’ திட்டத்தில் பழைய குப்பையை முற்றிலும் அழிக்க பயோமைனிங் திட்டம்-2 உருவாக்கி அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இங்கு பனி காலத்தில் துர்நாற்றம் வீசுவதும், வெயில் காலத்தில் அடிக்கடி தீப்பற்றி எரிவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.